வீணாகும் உணவுப்பொருள்

 வீணாகும் உணவுப்பொருள்இந்தியாவில் ஆண்டுக்கு 21 டன் மில்லியன் கோதுமை வீண்: அதிர்ச்சி ரிப்போர்ட்

               

                      ருவேளை உணவு கூட கிடைக்காமல் பசியால் சாகும் மக்கள் வாழும் இந்த பூமியில்தான் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டன் உணவுப்பொருட்கள் வீணாகின்றன. உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருளை சரியாக பாதுகாத்து வைக்காத காரணத்தினாலேயே உணவுப் பொருட்கள் வீணாவதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். உலக அளவில் ஒட்டு மொத்தமாக உற்பத்தியாகும் உணவுப்பொருட்களில் 50 சதவீதம் பொதுமக்களைச் சென்றடைவதில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் கெட்டுப் போய் வீணாவது குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினியர்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொண்டு இன்று அறிக்கை வெளியிட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
வறுமையான நாடுகளில் உணவுப் பொருட்களின் உற்பத்திகள் திறம்பட இல்லாததும், செல்வந்த நாடுகளில் இருக்கும் நுகர்வோர்கள் அதீதமான அளவில் பொருட்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுமே இதற்கு முக்கிய காரணங்கள் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி உணவு தானியங்கள் விரயமாவதை மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் சரிசெய்ய இயலும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரை போதிய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாத்து வைக்கும் வசதிகள் இல்லாததால், ஆண்டுதோறும் 21 மில்லியன் டன் கோதுமை வீணாவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவ்வாறு விணாகும் கோதுமையானது, ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த கோதுமைக்கு சமமாகும்.

குளிர்பதன போக்குவரத்து இல்லாமை, மோசமான சாலைகள், மோசமான வானிலை மற்றும் ஊழல் போன்றவற்றால் இந்தியாவில் குறைந்தபட்சம் 40 சதவீத பழங்கள், காய்கறிகள் வீணாகின்றன.

அதே சமயம் மல்டி பிராண்ட் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, சிங்கிள் பிராண்ட் சில்லரை வணிகத்தில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற இந்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் உள்கட்டமைப்பில் முதலீடுகள் அதிகரிப்பதற்கு வழிவகுப்பதுடன், சரக்கு போக்குவரத்தும் மேம்படும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 16 சதவீதம் அதாவது 3.2 மில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகின்றன. தானியங்கள் வீணாவதைவிட காய்கறிகள் மற்றும் பழங்கள்தான் அதிகம் வீணாகின்றன.

தேவைக்கு அதிகமாக வாங்கும் பழக்கமும் பிரச்சினைக்கு ஒரு காரணம் என்று அறிக்கை தெரிவிக்கிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு உணவை வழங்கு தேவைப்படும் இயற்கை வளங்கள் பூமியில் குறைவாகவே உள்ளன. மேலும் இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இன்னும் கூடுதலாக முன்னூறு கோடி பேருக்கு உணவளிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். எனவே உணவை வீணாக்குவது இனியும் தொடரக் கூடாது எனவும் அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு கூறியுள்ளது.

உலகம் முழுவதும் இருக்கக் கூடிய நில மற்றும் நீர் வளங்களை மேலும் திறம்பட எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் சில பரிந்துரைகளை அந்த அமைப்பு செய்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கூடுதலான நிலங்களை விவசாயத்துக்கு பயன்படுத்துவதும் சிரமமான விஷயம் என்பதால் விவசாயத்துறையில் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கான நீர் வளங்களை நிர்வகிப்பது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது எனக் கூறும் அந்த அமைப்பு, நீராதாரங்களின் மேலாண்மையும் மோசமாக இருப்பதாகவும் எனவும் தெரிவிக்கிறது. பெருமளவில் நீர் ஆவியாகும் வகையில் விவசாயம் செய்வது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும், சொட்டு நீர் பாசனத்தை நிறுவுவதற்கு செலவு கூடுதல் என்றாலும் அதன் மூலம் மூன்று மடங்கு கூடுதலான பலனைப் பெறலாம் எனவும் மெக்கானிக்கல் என்ஜினியர்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: