மழை பொழிய என்ன செய்ய வேண்டும்?



                                     பி அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் காட்டுப்பகுதியில் இருக்கும்போது இன்னாரின் தோட்டத்திற்கு நீர் பொழிவாயாக என்ற சப்தத்தைக் மேகத்திலிருந்து கேட்டார். உடனே அந்த மேகம் அங்கிருந்து நகர்ந்து கருங்கற்கள் நிறைந்த பகுதியில் மழை கொட்டியது. உடனே அங்கிருந்த வாய்க்கால் ஒன்றில் அந்த தண்ணீர் நிரம்பி ஓடலாயிற்று . அம்மனிதர்அந்த தண்ணீரை பின் தொடர்ந்து சென்றார். அங்கு ஒருவர் தனது தோட்டத்தில் நின்று கொண்டு மண்வெட்டியால் அத்தண்ணீரைத் தன் தோட்டத்திற்குத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் அடியானே! உனது பெயர் என்ன? என்று கேட்டார், அதற்கு அவர் மேகத்தில் கேட்ட அதே பெயரைக் கூறினார். பின்பு அவர், அல்லாஹ்வின் அடியானே! எனது பெயரை ஏன்கேட்கிறீர்? என்று கேட்டார். அதற்கு அவர், இத்தண்ணீரைப் பொழிந்த மேகத்தில் இன்னாரின் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவாயாக! என்று உமது பெயரை குறிப்பிட்டு ஒரு சப்தத்தை நான் செவியேற்றேன்.
இத்தோட்டத்தில் (மழை பொழிய) நீர் என்னசெய்வீர்?எனக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், அது பற்றிக் கேட்டு விட்டதால் கூறுகிறேன். நான் இதிலிருந்து கிடைக்கும் விளைச்சலை மூன்று பாகங்களாகப் பிரித்து, அதில் ஒன்றை தர்மம் செய்து விடுகிறேன்; மற்றொரு பாகத்தை நானும் எனது குடும்பத்தினரும் உண்ணுகிறோம், மீதமுள்ள ஒன்றை இந்நிலத்தில் (பயிரிட) போட்டு விடுகிறேன் என்று கூறினார். (முஸ்லிம்) மழை பொழிய உண்மையான காரணம்
மழை வருவதும் வராமல் இருப்பதும் வானியல் நிலை மாறிவிடுவதாலோ அல்லது பருவக்காற்று பலமாக வீசுவதாலோ அல்ல. மாறாக, அல்லாஹ்வின் உத்தரவின்படி அது பொழிகிறது. அல்லாஹ்வின் உத்தரவின்படி அது நின்றுவிடுகிறது. இதைத்தான் அல்லாஹ் இப்படிக் கேட்கிறான்: நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நாடினால் அதை உப்புக் கரிக்கும் நீராக ஆக்கியிருப்போம். (இவற்றுக்கு) நீங்கள் நன்றி செலுத்தவேண்டாமா? (அல்குர்ஆன் 56:68-70) அல்லாஹ்வின் உத்தரவு அடியார்களின் செயலுக்கேற்றவாறு மாறுபடுகிறது. அடியார்கள் நற்செயல்கள் புரியும்போது மழையைப் பொழிய வைக்கிறான். பாவங்கள் புரியும்போது மழையை தடுத்துவிடுகிறான். இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருமுறை நபி அவர்கள் எங்களை நோக்கி, ஓ முஹாஜிரீன்களே! ஐந்து காரியங்கள் உள்ளன. அல்லாஹ் காப்பாற்றுவானாக! அவற்றில் நீங்கள் மூழ்கிவிட்டால் வேதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். அவை:
1) எந்த சமுதாயத்தில் விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறும் அளவிற்கு பரவலாகிவிடுமோ அப்போது முன்னால் கேள்விப்படாத காலரா போன்ற புதுமையான நோய்கள் பரவும்.
2) அளவு, நிறுவைகளில் குறைபாடு செய்பவர்களுக்கு பஞ்சம், சிரமம் ஏற்படும். மேலும் அநியாயக்கார அரசன் சாட்டப்படுவான்.
3) ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொண்டால் வானிலிருந்து வரும் மழை அவர்களுக்கு தடுக்கப்படும். மிருகங்கள் மட்டும் இல்லையெனில் அவர்களுக்கு அறவே மழை பொழியாது.
4) அல்லாஹ் மற்றும் அவனது தூதருடன் செய்து கொண்ட வாக்குறுதியை முறித்துவிட்டால் அவர்கள் மீது அல்லாஹ் விரோதிகளை சாட்டிவிடுவான். அவர்களிடமுள்ளதை விரோதிகள் கைப்பற்றிக் கொள்வார்கள்.
5) அல்லாஹ்வின் வேதத்தின்படி இல்லாமல் தங்களின் மனோ இச்சைபடி தலைவர்கள் தீர்ப்பு வழங்கினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே சண்டைகளை உண்டாக்கிவிடுவான். (இப்னுமாஜா)
பாவத்திற்கு தண்டனை உண்டு
இந்த நபிமொழியில் மழை பொழியாமல் வறட்சி, பஞ்சம் ஏற்படுவதற்கு இரு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று அளவு, நிறுவைகளில் மோசடி செய்வது. இரண்டு, ஜகாத் கொடுக்காமல் இருப்பது. இவ்விரு காரணங்களிலும் அடுத்தவர்களுக்குச் சேரவேண்டியதை ஏதேனும் ஒரு வழியில் அபகரித்து அமுக்கிக் கொள்வதையே குறிக்கப்பட்டுள்ளது. எனவே திருடுவது, ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது, கலப்படம் செய்வது, மோசடி செய்வது போன்ற எந்த வழியில் அடுத்தவர் பொருளை அபகரித்துக் கொண்டாலும் அவையனைத்தும் இந்த நபிமொழி எச்சரிக்கையின் கீழ் வந்துவிடும்.
மனிதன் பாவம் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவான். மழை தடுக்கப்படுவதும், வறட்சி, பஞ்சம் ஏற்படுவதும் அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றாகும். ஃபிர்அவ்னின் கூட்டத்தார் நல்லுணர்வு பெறுவதற்காக, பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்து தண்டித்தோம் (7:130) என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
மழை பொழிய பாவமன்னிப்பு அவசியம்
தௌபா செய்து பாவத்திலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரினால்தான் அடியானின் பாவங்கள் மன்னிக்கப்படும். பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டால் தண்டனைகள் விலக்கிக் கொள்ளப்படும். அப்போது மழை பொழியும். எனவேதான் நபியவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்களும் மழை தடுக்கப்பட்டிருக்கும் காலத்தில் தனது சமுதாயத்தாரிடம் பாவமன்னிப்புத் தேடுமாறு கோரினார்கள்.
நபி நூஹ் (அலை) தமது சமுதாயத்தாரிடம் கூறியதை அல்லாஹ் எடுத்துரைக்கிறான்: உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக, அவன் மிக மன்னிப்பவன். (மன்னிப்புத் தேடுனால்) உங்களுக்குத் தொடர்ந்து மழையை அனுப்புவான். உங்களுக்கு செல்வங்களையும் பிள்ளைகளையும் கொடுத்து உதவி செய்வான். உங்களுக்குத் தோட்டங்களை உண்டாக்குவான். (வற்றாத) ஆறுகளையும் உருவாக்கிடுவான் என்று நான் கூறினேன். (71:10-12)
நபி ஹுது (அலை) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: என் சமுதாயமே! உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். (பாவத்தை விட்டும் விலகி) அவன் பக்கம் திரும்பிவிடுங்கள். வானிலிருந்து மழையை உங்கள் மீது தொடராக அனுப்பிடுவான். உங்களின் வலிமைக்கு மேல் இன்னும் அதிகமான வலிமையைப் பெருகச் செய்வான். (இதைப் புறக்கணித்து) குற்றவாளிகளாகத் திரும்பிவிடாதீர்கள் (11:52)
மழை பொழியாமல் வறட்சி ஏற்படுவதற்கு உண்மையான காரணம் மனிதர்கள் செய்யும் பாவங்கள்தாம். எனவேதான் முஜாஹித் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: கடும் வறட்சி, அல்லது மழையே இல்லாமல் போய்விட்டால் மிருகங்கள், `ஆதமின் மகன் செய்த பாவத்தால் வந்த வினை இது` என்று பாவம் செய்பவர்களை சபிக்கிறது.
இன்று மழைத் தொழுகை கூட, ஒருபுறம் வருடந்தோறும் நடைபெறும் சம்பிரதாயமாகவும் மறுபுறம் எப்படித் தொழவேண்டுமென விவாதப் பொருளாகவும் ஆகிவிட்டது. தொழுகை அசல் அல்ல; கண்ணீர் சிந்தி, பாவமன்னிப்புத் தேடி, துஆ செய்வதுதான் அசலாகும். எனவேதான் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள், மழைத் தொழுகை சுன்னத் அல்ல; பணிவுடன் இறையச்சத்துடன் மைதானத்திற்குச் சென்று துஆ செய்வதுதான் அசல் சுன்னத் என்றார்கள்.

0 comments:

தாய் தந்தையரின் முக்கியத்துவம்




[ இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விஷயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது.
இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.]
"(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)
தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக இருப்பதே!
நம்மைப் போலவே அவர்களும் இளவயதுகளைக் கடந்து இன்று காலத்தின் வேகத்தால் முதுமையை அடைந்திருக்கின்றனர். அவர்களுடைய இளம் வயதில் நம்மை, அதாவது அவர்களுடைய பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளையே கொண்டு வாழ்ந்தனர். அவர்களின் முயற்ச்சிக்கு தக்கவாரோ அல்லது கூடுதல், குறைவாகவோ இறைவன் அவர்களுக்கு அருளியதைக் கொண்டு நம்மை வளர்த்து நமது இன்றைய நிலைக்கு முக்கியமான கருப்பொருளாக இருக்கின்றனர். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று பெரும்பான்மையோரின் கூற்றுக்களை ஆராய்வோமேயானால் மிகப் பெரும் ஆச்சரியமாக இருக்கும்; அதாவது:-
"எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு எதையுமே விட்டு வைக்கவில்லை," அதனால் தான் நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம்"
என்பதே அக்கூற்று இக்கூற்றுக்காரர்கள் ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகின்றனர். அதாவது இவர்களுடைய பிள்ளைகளும் நாளைக்கு இதே கூற்றைத் தானே மொழிவார்கள்! இதன் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.
எந்த ஒரு மனிதனாயினும் அவனுடைய முயற்சிகள் அத்தனையும் பிரயோகித்து எப்படியாகிலும் நாம் ஒரு நல்ல நிலையை அதாவது ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி செய்யும்பொழுது இறைவனின் நாட்டப்படி சிலர் நல்வழியில் சம்பாதித்து முன்னேறுகிறார்கள். சிலர் தீயக் காரியங்களில் முயற்சித்து அந்நிலையை அடைகிறார்கள். சிலர் எந்நிலை முயன்றும், முன்னேறாமல் எப்பவும் போல் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.
இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிகின்ற விசுவாசிகளான மனிதர்கள், மேற்சொன்ன மூன்றாவது நிலையை அடைகின்ற பெற்றோர்கள் எந்நிலையிலும் அவ்வாழ்க்கைக்கு அவர்கள் முழுப் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். இதை மேலும் உணர வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்கால வாழ்க்கையையே உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது நமது முயற்சி எப்படிப்பட்டது? அதற்காக நாம் செய்கின்ற தியாகங்கள் முதலியன. இதிலிருந்து நாம் எந்த அளவு இன்றைய நிலையில் முயற்சிக்கிறோமோ! அதை போலவே அல்லது அதைவிடக் கூடுதலாகவே நம் பெற்றோர்களும் முயற்சித்து இருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டப்படி அவர்களுக்கு உண்டானதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் முற்றிலும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்களாக பெற்றோர்களை குற்றஞ்சாட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அருளிய இவ்வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பெரும் செயலாகவே பொருளீட்டுவதைக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கீழ்கண்ட வசன மூலம் அறிகிறோம்.
"தொழுகை முடிவு பெற்றால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்." (62:10)
இதை நினைவுகூர்ந்தவர்களாக பெற்றோரை குறை கூறும் தீய வழக்கத்தை மாற்றி, ஒவ்வொருவரும் நல்வழியில் முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும்.
தாய் தந்தையரிடம் பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வது, பின்னவர்களின் இரு உலக வாழ்க்கைக்கும் மிகப் பெரும் வெற்றியை பெற வழிவகுக்கின்றது. பிள்ளைகளின் மேல் வாழ்க்கைக்காக இருவருமே தங்களைக் கூடுமானவரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாகவே இறைவன்:
"தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)
இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விசயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.
இதை தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் இறைக்கட்டளைகளின்படி வாழ முழு முயற்சி செய்தவர்களாக தாங்களும் நல்வழியில் நடந்து தத்தமது பிள்ளைகளையும் அந்நிலையில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியே ஏதோ காரணங்களினால் பெற்றோர்களே தவறுகள் செய்திருந்தாலும் (மனித இயல்புத்தானே!) பிள்ளைகள் அவற்றை மறந்து, அவர்களை அறவணைத்து வாழ முற்பட வேண்டும். இது இரு சாரருக்கும் பொருந்தும். தவறு செய்பவர்களிடம் அல்லது செய்தவர்களிடம் நாம் மென்மையாக எடுத்துச் சொல்லி அவர்களின் தவறுகளைக் களைய முயல வேண்டும். நமது தளராத அரவணைப்பால், காலப்போக்கில் அவர்களே தங்களின் தவறுகளை உணர்ந்து நமக்காக வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும் ஒரு நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.
நாம் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், பெற்றோர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவிகளை செய்வதை நமது தலையாயக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை அது இறைக்கட்டளைக்குட்பட்டதாயின் செவியேற்ற அமுல் நடத்த முற்பட வேண்டும். இதன் தராதரத்தை அறியும் விதமாகவே இறைவன் :
தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன். (29:8)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்.
பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ரு ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ)
மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்.

0 comments:

இஸ்லாமிய வாழ்வு


வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் உள்ள தொடர்புதான் தொழுகைக்கும் குர்பானிக்கும் இடையில் நிகழுகின்றது. பொதுப் படையாக இங்கு நாம் சொன்னதை சற்று விரிவாக கூறலாம். தொழுகை என்றால் என்ன? இறைவனை நினைவு கூர்வது. ""என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக'' (அல்குர்ஆன் 20/14) இன்னோரிடத்தில் ""தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தார். அடுத்து தொழுதார்''. (அல்குர்ஆன் 87/15) இந்த கருத்தை சுட்டிக் காண்பிக்கும் வசனங்கள் பல உள்ளன. திக்ரு என்றால் என்றென்றும் தொடரக் கூடிய எந்நேரமும் ஈடுபடக் கூடிய இறைநினைவு என்பதாகும். வான்மறை குர்ஆனில் ""நின்ற நிலையிலும் உட்கார்ந்த நிலையிலும் ஒருக்களித்து படுத்தவர்களாகவும் அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூருகிறார்கள்'' (அல்குர்ஆன் 3/191) இதன் காரணமாகத்தான் நம்முடைய இரவும் பகலும் அல்லும் பகலும் தொழுகைகளால் சூழப்பட்டுள்ளன. எந்த நிலையிலும் தொழுகையை விடுவதற்கு அனுமதியே இல்லை. சுவாசத்தைப் போல வாழ்க்கைக்கு தொழுகையும் இன்றியமையாதது. உண்மையான மெய்யான வாழ்க்கை நூர்-ஒளி, ஸகீனத்- மனஅமைதி, ஈமான்- இறைநம்பிக்கை போன்ற சொற்களால் சுட்டப் படுகின்றது. அப்படிப்பட்ட அந்த மெய் வாழ்க்கை இறை நினைவால் மட்டும்தான் சுவாசித்து உயிரோடு இருக்க முடியும். இறைவனுடைய நெருக்கத்தை அடைவதற்கும் இதுதான் பாதை. இறைவனுடைய நெருக்கம் என்றால் அவனை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பது எனப்பொருள்.

அவனை நினைவு கூர்வதை விட்டு விட்டோம், அலட்சியப் படுத்துகிறோம் என்றால் அவனை விட்டு வெகுதூரம் வந்து விட்டோம் என்று பொருள். (அஆதல்லாஹு மின்ஹா) இறைவனை ஒரு அடியான் நினைவு கூரும் போது இறைவனுக்கு பக்கத்தில் போய்விடுகிறான். "ஸஜ்தா செய்வீராக அவனை நெருங்குவீராக' (அத்தியாயம் 96/19) அப்போதுதான் இறைவனுடைய கருணைப் பார்வை அடியான் மீது படுகின்றது. அவனுடைய உள்ளம் ஒளியால் இறைவனுடைய நூரால் ஒளிர்கின்றது. தகதக என மின்னுகின்றது. அவனுடைய ஆன்மா திக்ரு என்னும் இறைநினைவாலும் ஃபிக்ரு என்னும் இறைசிந்தனையாலும் மூழ்கும் போது எவ்வளவு ஆழமாக மூழ்குகின்றதோ எவ்வளவு முனைப்போடு ஈடுபடுகின்றதோ அழியாத ஆற்றலை அள்ளி அள்ளி எடுத்துக் கொள்கின்றது. புகாரியில் பதிவாகியுள்ள ஒரு நபிமொழி இந்த உண்மையை நமக்கு எடுத்துரைக்கின்றது. "ஒரு அடியான் நஃபில் உபரி வணக்கங்கள் வழியாக என்னை நெருங்குகிறான். நான் அவனை நேசத்திற்குரியவனாக ஆக்கிக் கொள்கிறேன். என்னுடைய நேசத்திற்குரியவனாக அவனை நான் ஆக்கிக் கொள்ளும் போது. கேட்கின்ற அவனுடைய செவிகளாக மாறுகிறேன். காணுகின்ற அவனுடைய கண்களாக மாறுகிறேன் பற்றுகின்ற அவனுடைய கரங்களாக மாறுகிறேன்'. மெய்யான வாழ்க்கை என நாம் குறிப்பிடுவது இதோ இந்த வாழ்க்கையைத்தான். அப்படியென்றால் என்ன பொருள்? உண்மையான வாழ்க்கையை மெய்யான வாழ்க்கையை பெற்றுத் தருகின்ற சுனையாக தொழுகை திகழுகின்றது. அழியக் கூடிய லெளகீக வாழ்க்கையிலிருந்து நம்மை விடுவிக்கின்றது. இப்போது குர்பானியை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் ஆகியோருடைய நிகழ்வை இப்போது கண்டு வந்துள்ளோம். நம்முடைய ஆன்மாக்களை இறைவனிடம் ஒப்படைப்பது அது தான் நமக்கு கிடைக்கின்ற படிப்பினை. முழுமையான கீழ்ப்படிதல் முழுமையான அர்ப்பணிப்பு நிறைவான அடிபணிதல் போன்றவற்றையெல்லாம் உலகிற்கே எடுத்துக்காட்டி அற்புதமான உதாரணமாக என்றென்றும் திகழுகின்ற மாபெரும் நிகழ்வொன்றின் ஞாபகச் சுவடாக குர்பானி திகழுகின்றது. அம்மாபெரும் நிகழ்வால் தான் அந்த மனிதரை- இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தம்முடைய தோழராக இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

இறைநம்பிக்கையாளர்கள் இறைவனுடைய பாதையில் தங்களுடைய உயிர்களை அர்ப்பணித்து கீழ்ப்படிதலையும் அடிமைத் தனத்தையும் வெளிப்படுத்தி நிலைநாட்டுகிறார்கள். அம்மாபெரும் நிகழ்வின் சுவடுகளை மறுபடியும் எழுதுகிறார்கள். பார்த்தீர்களா? அல்லாஹ்வோடு நம்முடைய வாழ்வாக தொழுகை திகழுகின்றது. அல்லாஹ்வுடைய பாதையில் நம்முடைய சாவாக குர்பானி திகழுகின்றது. உண்மையான சமய நெறி என்றால், உண்மையான இஸ்லாம் என்றால், அது இதுதான். எனவேதான் ""சொல்! நிச்சயமாக என்னுடைய இறைவன் நெடுநெடுவென நேரான பாதையை எனக்கு வழி காட்டியிருக்கிறான். நேர் நன்னெறி இப்ராஹீமின் சமய நெறி. இறைவனை மட்டுமே ஒருமித்து அவர் வணங்கினார். இறைவனுக்கு இணை வைத்து வேறு வேறு தெய்வங்களை வணங்கும் முஷ்ரிக்காக அவர் இல்லை. சொல்! என்னுடைய தொழுகையும் என்னும் குர்பானியும் என்னுடைய வாழ்வும் என்னுடைய சாவும் அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்காவே''. (அல்குர்ஆன் 6/161,162) குர்ஆன் விரிவுரையாளர்கள் அனைவரும் இந்த வசனத்தில் உள்ள நுஸுக் என்னும் சொல்லிற்கு ஹஜ் உம்ராவில் கொடுக்கப்படுகின்ற குர்பானி என பொருள் கொள்கிறார்கள். அரபி மொழியிலும் இதற்கு இவ்வாறு பொருள் கொள்ள இடம் இருக்கின்றது. இந்த வசனத்தை உற்று கவனியுங்கள் ஸலாத்தும் நுஸுக்கும் ஒரு வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு நிகராக அடுத்த வரிசையில் மஹ்யா என்பதும் மமாத் என்பதும் வைக்கப்பட்டுள்ளன. சொல் கட்டமைப்பையும் வாக்கிய முறைமையையும் நன்கு கவனியுங்கள். இவ்விரண்டு வரிசைகளுக்கும் இடையே உள்ள நிகரற்ற தொடர்பை இவை வெளிப்படுத்துகின்றன. அதாவது ஒரு முஸ்லிமுடைய இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிகின்ற அடிமையுடைய வாழ்க்கையாக தொழுகை திகழுகின்றது. அல்லாஹ்வுடைய பாதையில் சாவாக குர்பானி திகழுகின்றது. தொடர்ந்து சிந்தித்துப் பார்த்தால் இவை இரண்டும் ஒன்றே என புலப்படுகின்றது ஏனென்றால் சாவுதான் உண்மையான வாழ்க்கையின் வாசலை திறக்கின்றது. ""அல்லாஹ்வுடைய பாதையில் கொலையுண்டவர்களை பிணங்கள் என சொல்லாதீர்கள். அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். உங்களால்தான் உணர்ந்து கொள்ள முடிவதில்லை''. (அல்குர்ஆன் 2/154) உண்மையான குர்பானி ஒன்று இருக்கின்றது. அதனுடைய இறக்கைகளாக இந்த தொழுகையும் இந்த குர்பானியும் திகழுகின்றது. அதனுடைய விளக்கம் என்னவென்றால், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதனைப் படைத்து அவனை அறிவுள்ளவனாக ஆக்கினான். சிந்திக்கின்ற சீர்தூக்கிப் பார்க்கின்ற நன்மை தீமைகளை எடைபோடுகின்ற ஆற்றலை அறிவை வழங்கினான். அதன் பின்பு யாராலும் அடைய முடியாத, அதை விட உச்சி என்று ஒன்றில்லை என்று சொல்லப்படுகின்ற மிக உயரமான ஒரு நிலையை அவனுக்கு வழங்கினான். அதே போல இதைவிட கீழ்த்தரமான இன்னொரு இழிவு இல்லை எனக் குறிப்பிடும் அளவுக்கு பயங்கரமான படு மோசமான இழிநிலை ஒன்றையும் வழங்கினான். குர்ஆன் கூறுகின்றது ""நிச்சயமாக நாம் மனிதனை அழகிய வடிவில் உருவாக்கினோம். பிறகு அவனை கீழ்த்தரத்திலும் கீழ்த்தரத்தில் தள்ளினோம். ஆயினும் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்பவர்களை தவிர அவர்களுக்கோ நிரந்தரமான அருட்கொடைகள் கிடைக்கவுள்ளன''. (அல்குர்ஆன் அத்தீன்/4,5,6) தொடர்ந்து குர்ஆன் கூறுகின்றது ""ஆன்மாவை படைத்து அதற்கு உருக்கெடுத்தவன் மீது சத்தியமாக, அவனே அதற்கு நன்மையையும் தீமையையும் உள்ளமையில் உணர்த்தினான். ஆன்மாவை அலங்கரித்தவன் வெற்றிபெற்றுவிட்டான். ஆன்மாவை மண்ணோடு மண்ணாக ஆக்கியவன் அழிந்து நிர்மூலமாகிவிட்டான்''. (அத்தியாயம் 91/7-10) காரணம் என்ன தெரியுமா? உண்மையான அருட்கொடையாளனை ஒரு மனிதன் அலட்சியப்படுத்தும் போது இறைவனின் ஒளிக்கதிர்கள் ஒளிச்சுடர்கள் அவனுடைய பார்வைக்கு புலனாகாமல் மறைந்து விடுகின்றன. பாதிலுடைய அடர்ந்த இருள் படர்ந்த புதர்களில் அவன் சிக்கிக் கொள்கிறான். தன்னைத்தானே மனோ இச்சைகளின் வலைகளில் ஒப்படைத்து விடுகிறான். மனோ இச்சைகளே அவன் வணங்கி வழிபடும் தெய்வங்களாக மாறிவிடுகின்றன. வான்மறை குர்ஆன் சொல்வதைப் போல ""தன்னுடைய மனோ இச்சைகளையே கடவுளாக தேர்ந்தெடுத்துக் கொண்டவனை நீங்கள் பார்க்கவில்லையா? அறிவை பெற்றிருந்த போதிலும் அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டுவிட்டான்''. (அத்தியாயம் 45/23) அறிவுப் பார்வை செவிப் புலன் எல்லாவற்றையும் அவன் பெற்றிருந்தான். ஆயினும் வழிகேட்டுப் பாதையில் வழுக்கி விழுந்தான். அத்தியாயம் தஹர் குறிப்பிடுவதைப் போல ""கலங்கலான நீர்த்துளி ஒன்றிலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம். சோதிப்பதற்காக செவியேற்பவனாகவும் காண்பவனாகவும் நாம் ஆக்கினோம். வழியையும் அவனுக்கு காண்பித்தோம். விரும்பினால் நன்றி உள்ளவனாக மாறலாம் விரும்பினால் நன்றி கொன்றவனாகவும் ஆகலாம்'' (அல்குர்ஆன் 76/2,3) அப்படியென்றால் இறைவன் வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளை முறையாக பயன்படுத்தா விட்டால் நன்றி கொன்றவனாகி விடுவான். வழிகேட்டுப் பாதையில் செல்லத் தொடங்கி விடுவான். ""அவனுடைய காதுகளிலும் அவன் உள்ளத்தின் மீதும் முத்திரை குத்திவிட்டோம். அவனுடைய பார்வைகளுக்கு மேலாக திரை போர்த்தப் பட்டுவிட்டது. அல்லாஹ்வுக்குப் பிறகு, அவனுக்கு நேர்வழியை காட்டக் கூடியவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? நீங்கள் ஏன் சிந்திப்பதே இல்லை?'' (அல்குர்ஆன் 45/23) இறைவனிடமிருந்து தன்னுடைய முகத்தை திருப்பிக் கொண்டு பார்வையை அகற்றிக் கொண்டு மனோ இச்சையின் அடிமையாக மாறிவிட்டால் அவனை அவனுடைய மனோ இச்சைகளிடமே ஒப்படைத்து விடுகிறான். அப்போது அவனுடைய உள்ளத்தின் மீது இருட்திரை படிந்து விடுகின்றது. ""கண்டிப்பாக இல்லை. அவர்கள் செய்த செயல்களின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களின் மீது இருட்திரை படிந்து விடுகின்றது. கண்டிப்பாக இல்லை. அந் நாளில் அவர்கள் தங்களுடைய இறைவனை காணாமல் திரை மறைவில் இருப்பார்கள். (அத்தியாயம் 83/14,15) இந்த உலக வாழ்க்கையில் இறைவனின் இறைநம்பிக்கை ஒளியை காணாமல் அலட்சியப் படுத்தியவர்கள் மறு உலக வாழ்க்கையில் இறைவனை காணும் நற்பேற்றை இழந்து தவிப்பார்கள். மனிதன் எதை விரும்புகிறானோ இறைவனிடமிருந்து அதுவே கிடைக்கின்றது. மனோ இச்சைகளின் மனதையும் மனதின் இச்சைகளையும் விரும்பியவர்கள் மனோ இச்சைகளுக்கு அடிமைகளாகவே ஆகிவிட்டார்கள். இறுதித் தீர்ப்பு நாளன்று தங்களுடைய மனதின் உண்மை சொரூபத்தை உணர்வார்கள். அது எப்படி இருக்கும் தெரியுமா? அதுவும் விளக்கப்பட்டுள்ளது. ""பிறகு அவர்கள் நரகில் நுழைக்கப்படுவார்கள்''. ஆகையால் மனம் என்னும் பெரியதொரு சிலையை மனிதன் உடைத்து நொறுக்க வேண்டும். அது எப்படி சாத்தியம்? மனதையும் மனதின் நிலைகளையும் பற்றி ஆராய்ந்தவர்கள், மனதிற்கு இரண்டு இறக்கைகள் இருப்பதை கண்டறிந்தார்கள். ஒன்று விலங்கு தன்மை. இன்னொன்று கால்நடைகளின் குணம். எனவேதான் இந்த இரண்டு இறக்கைகளையும் உடைத்து எறியக் கூடிய வழிமுறைகள் மனிதனுக்கு கற்பிக்கப்படத் தொடங்கின. இப்போது இவ்விரண்டையும் விளக்கமாக காண்போம், 1) மிருகத்தன்மையை உடைப்பதற்கான வழி என்னவென்றால், அல்லாஹ்வுக்கு முன்னால் அச்சத்தோடும் தாழ்மையோடும் பணிவோடும் பவ்யத்தோடும் தொழுது வர வேண்டும். நஃப்ஸின் நான் என்னும் அகப்பாவத்தையும் நஃப்ஸ்ஸின் இருப்பைக் குறித்த எண்ணத்தையும் தொழுகை மட்டும்தான் அழிக்கும். ஏனென்றால் தொழுகையின் மிக உன்னத அம்சமாக தலையாய பண்பாக இறையச்சம் இறைபயம் திகழுகின்றது. இதை மனதில் கொண்டுதான் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது. ""சந்தேகமே இன்றி இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். அவர்கள் தங்களுடைய தொழுகைகளில் இறைவனுக்கு மிகவும் அஞ்சுகிறார்கள்''. (அல்குர்ஆன் 23/1,2) தொடர்ந்து கூறப்பட்டுள்ளது ""நடுநடுங்கியவாறும் பயந்தவாறும் உங்களுடைய உள்ளத்தில் தாழ்ந்த குரலில் உங்கள் இறைவனை நினைவு கூருங்கள், காலையிலும் மாலையிலும். அறிவற்று அலட்சியப்படுத்துபவர்களாக ஆகிவிடாதீர்கள். உங்கள் இறைவனுக்கு அருகில் இருப்பவர்கள் தங்கள் வணக்க வழிபாடுகளை பெரிதாக எண்ணுவதில்லை. அவனை அவர்கள் புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவனுக்காக அவர்கள் சிரம் பணிகிறார்கள்''. (அல்குர்ஆன் 7/205,206) பிரிதோரிடத்தில் ""பொங்கும் கருணையாளனாகிய இறைவனின் அடிமைகள் யாரென்றால், நிலத்தின் மீது அவர்கள் பணிவோடு நடக்கிறார்கள். மென்மையாக நடக்கிறார்கள். அறிவற்றோர் அவர்களோடு வாதத்தில் இறங்கினால் ஸலாம் என உரைத்து விலகுகிறார்கள். தங்களுடைய இரவுகளை இறைவனுக்காக நின்ற நிலை யிலும் ஸஜ்தா செய்த நிலையிலும் கழிக்கிறார்கள்''. (அல்குர்ஆன் 25/63,64) இந்த வசனங்களை உற்று கவனியுங்கள். தொழுகையைப் பற்றி சொல்லப்படுவதற்கு முன்னால் தாழ்மையைப் பற்றி குறிப்பிடப்படுகின்றது. ஏனென்றால், ஆணவம் அகம்பாவத்திலிருந்து தூய்மைப் படுத்துவதுதான் உண்மையில் தொழுகையின் செயல். தொடர்ந்து இறைவனை நினைவுகூர்ந்து கொண்டே இருப்பவர்கள் இறைவனுடைய ஆற்றலையும் வல்லமையையும் உணர்ந்து அவன் பொழிந்துள்ள அருட்கொடைகளையும் அவனுடைய கருணையையும் நினைத்துக் கொண்டே இருப்பவர்களின் முகங்களில் தாழ்மையும் பணிவும் அன்பும் அழகுபட மிளிர்வதை பார்க்க முடியும். இரண்டாவது இறக்கை கால்நடை குணமாகும். அதை உடைத்து சுக்குநூறாக ஆக்க வேண்டுமென்றால் இந்த உலகத்திலுள்ள பொருட்களில் எதையெல்லாம் நம்முடைய மனம் விரும்புகின்றதோ அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். இது மூன்று நிலைகளில் அமைகின்றது, முதலாம் நிலை இறைவனுடைய பாதையில் உயிரை அர்ப்பணிப்பது. உயிரை அர்ப்பணிப்பதிலேயே உன்னதமான நிலை நாம் பெற்றெடுத்த பிள்ளைகளை அர்ப்பணிப்பது. எனவேதான் இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய ஒரே மகனான இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறுத்து பலியிடுமாறு ஆணை யிடப்பட்டது. ஒரு சோதனை. அவர்கள் தம்முடைய மகனை வெகுவாக நேசித்தார்கள். இஸ்மாயில் மீது இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அளவற்ற பாசம் இருந்தது என்பதை ஒரு நிகழ்விலிருந்து நாம் உணரலாம். வானவர்கள் இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் வந்து இஸ்ஹாக் அவர்கள் பிறப்பார்கள் என்னும் நற்செய்தியை உரைத்தபோது இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "இஸ்மாயில் உயிரோடு இருக்கட்டும்' என்றார்கள். இஸ்மாயில் மீது அவர்களுக்கு எந்தளவு பாசம் இருந்தது என்பதை இந்த வார்த்தைகளை கொண்டு நாம் எடை போடலாம். இரண்டாவது நிலை இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதில் கீழ்ப்படிவதில் இன்னல்களையும் இடுக்கண்களையும் சோதனைகளையும் சித்திரவதைகளையும் துன்பங்களையும் ஆபத்துகளையும் எதிர் கொள்வது. அந்த பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதற்காக விருப்பங்கள் இச்சைகளை விட்டு விடுவது. ஏனென் றால், வாழ்க்கைக்கு அடுத்தபடியாக வாழ வேண்டும் என்னும் ஆசைக்கு அடுத்த படியாக இச்சைகளைத்தான் மனம் தேடுகின்றது. இந்த நிலையில் மிகச் சிறந்த வழிகாட்டி நோன்பாகும். குர்பானி என்னுமிடத்திற்கு கொண்டு போய் சேர்க்கின்ற இந்த பாதையில் பலபேர் பயணிக்கிறார்கள் அவர்களில் பலர் பலவீனமானவர்கள். இந்த பலவீனமானவர்கள் நோன்பு வரைக்கும்தான் பயணிக்க முடிகின்றது. மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உன்னதத்திலும் உன்னதமானதை அடைவதற்கான வழி முறை எது? என்பதே அந்த கேள்வி. இந்த உண்மையை மனதிற் கொண்டு இறைத்தூதர் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் "நோன்பு அதனோடு தொழுகை இவ்விரண்டையும் கொண்டு அடையலாம்' என பதில் அளித்தார்கள். மூன்றாவது நிலை செல்வத்தை அர்ப்பணிப்பது. செல்வத்தின் மூலமாகத்தான் நாம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறோம். அந்த செல்வத்தை இறைவனுடைய பாதையில் தியாகம் செய்வது. செலவழிப்பது. இந்தப் பாதையில் சரியான வழிகாட்டி ஜகாத்தாகும். வரையறுக்கப்பட்ட கடமையாக்கப்பட்ட ஜகாத் அல்ல அல்லாஹ்வுடைய வழியில் செலவழிக்கும் இன்ஃபாக் என்னும் ஜகாத். குறிப்பிடப்பட்ட ஜகாத் தொகைக்கு அதிகமாக செலவு செய்தால் என்ன விளைகின்றது தெரியுமா? மனிதனிடம் ஆணவம் அகம்பாவம் தற்பெருமை கர்வம் தெனாவட்டு போன்ற குனங்கள் எல்லாம் தோன்ற காரணமாக இருக்கின்ற செல்வத்தை இறைவனுடைய வழியில் அவன் செலவழித்து விடுகிறான். இப்படியாக மனதை கட்டிப்போடுகின்ற இச்சைகளிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் மனதை விடுவிப்பதன் மூலம் கால்நடை குணம் என்னும் இந்த இறக்கையை முறித்துப் போடுவதன் மூலம் மனம் விடுதலையாகின்றது. ஆகையால் நாம் எதை அதிகமாக நேசிக்கிறோமோ அதனை அல்லாஹ்வுடைய வழியில் செலவழிக்க வேண்டும். எனவேதான் வான்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது ""நீங்கள் அதிகமாக நேசிக்கின்றவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாதவரைக்கும் நன்மையை ஒருபோதும் அடைய முடியாது''. (அல்குர்ஆன் 3/92) இந்த கால்நடைகளை குர்பானி கொடுக்கின்றோமே, அதிலும் இந்த ஹிக்மத் இந்த நுட்பம் பொதிந்திருக்கின்றது. இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மிக அதிகமாக எதனை நேசித்தார்களோ அதனை அந்த மகனை பலி கொடுக்குமாறு உத்தரவு வந்தது. குர்பானியின் மூலம் அதுதான். இன்னுயிரை ஆருயிரை அர்ப்பணிப்பதுதான் குர்பானியின் உண்மையான பொருள். அதாவது இரத்தம் சிந்துவது. ஆகையால் இரத்தம் சிந்துவதை அதை சுட்டிக் காட்டும் அடையாளமாக ஆக்கப்பட்டது. இந்த விஷயங்களை எல்லாம் முன்னால் வைத்து பார்த்தால் தொழுகையும் குர்பானியும் உண்மையில் நம்முடைய மனதை பலி கொடுக்கின்ற நம்முடைய மனதை அர்ப்பணிக்கின்ற இரண்டு வடிவங்களாக திகழுகின்றன. நபிமொழி ஒன்று இந்த உண்மையை நமக்கு விளக்கிக் கூறுகின்றது "இந்த உம்மத்தின் குர்பானி, நஃப்ஸை பலியிடுவது மற்றும் தொழுகையின் மூலமாக கொடுக்கப்படுகின்றது'.

0 comments: