மழை பொழிய என்ன செய்ய வேண்டும்?



                                     பி அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் காட்டுப்பகுதியில் இருக்கும்போது இன்னாரின் தோட்டத்திற்கு நீர் பொழிவாயாக என்ற சப்தத்தைக் மேகத்திலிருந்து கேட்டார். உடனே அந்த மேகம் அங்கிருந்து நகர்ந்து கருங்கற்கள் நிறைந்த பகுதியில் மழை கொட்டியது. உடனே அங்கிருந்த வாய்க்கால் ஒன்றில் அந்த தண்ணீர் நிரம்பி ஓடலாயிற்று . அம்மனிதர்அந்த தண்ணீரை பின் தொடர்ந்து சென்றார். அங்கு ஒருவர் தனது தோட்டத்தில் நின்று கொண்டு மண்வெட்டியால் அத்தண்ணீரைத் தன் தோட்டத்திற்குத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் அடியானே! உனது பெயர் என்ன? என்று கேட்டார், அதற்கு அவர் மேகத்தில் கேட்ட அதே பெயரைக் கூறினார். பின்பு அவர், அல்லாஹ்வின் அடியானே! எனது பெயரை ஏன்கேட்கிறீர்? என்று கேட்டார். அதற்கு அவர், இத்தண்ணீரைப் பொழிந்த மேகத்தில் இன்னாரின் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவாயாக! என்று உமது பெயரை குறிப்பிட்டு ஒரு சப்தத்தை நான் செவியேற்றேன்.
இத்தோட்டத்தில் (மழை பொழிய) நீர் என்னசெய்வீர்?எனக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், அது பற்றிக் கேட்டு விட்டதால் கூறுகிறேன். நான் இதிலிருந்து கிடைக்கும் விளைச்சலை மூன்று பாகங்களாகப் பிரித்து, அதில் ஒன்றை தர்மம் செய்து விடுகிறேன்; மற்றொரு பாகத்தை நானும் எனது குடும்பத்தினரும் உண்ணுகிறோம், மீதமுள்ள ஒன்றை இந்நிலத்தில் (பயிரிட) போட்டு விடுகிறேன் என்று கூறினார். (முஸ்லிம்) மழை பொழிய உண்மையான காரணம்
மழை வருவதும் வராமல் இருப்பதும் வானியல் நிலை மாறிவிடுவதாலோ அல்லது பருவக்காற்று பலமாக வீசுவதாலோ அல்ல. மாறாக, அல்லாஹ்வின் உத்தரவின்படி அது பொழிகிறது. அல்லாஹ்வின் உத்தரவின்படி அது நின்றுவிடுகிறது. இதைத்தான் அல்லாஹ் இப்படிக் கேட்கிறான்: நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நாடினால் அதை உப்புக் கரிக்கும் நீராக ஆக்கியிருப்போம். (இவற்றுக்கு) நீங்கள் நன்றி செலுத்தவேண்டாமா? (அல்குர்ஆன் 56:68-70) அல்லாஹ்வின் உத்தரவு அடியார்களின் செயலுக்கேற்றவாறு மாறுபடுகிறது. அடியார்கள் நற்செயல்கள் புரியும்போது மழையைப் பொழிய வைக்கிறான். பாவங்கள் புரியும்போது மழையை தடுத்துவிடுகிறான். இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருமுறை நபி அவர்கள் எங்களை நோக்கி, ஓ முஹாஜிரீன்களே! ஐந்து காரியங்கள் உள்ளன. அல்லாஹ் காப்பாற்றுவானாக! அவற்றில் நீங்கள் மூழ்கிவிட்டால் வேதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். அவை:
1) எந்த சமுதாயத்தில் விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறும் அளவிற்கு பரவலாகிவிடுமோ அப்போது முன்னால் கேள்விப்படாத காலரா போன்ற புதுமையான நோய்கள் பரவும்.
2) அளவு, நிறுவைகளில் குறைபாடு செய்பவர்களுக்கு பஞ்சம், சிரமம் ஏற்படும். மேலும் அநியாயக்கார அரசன் சாட்டப்படுவான்.
3) ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொண்டால் வானிலிருந்து வரும் மழை அவர்களுக்கு தடுக்கப்படும். மிருகங்கள் மட்டும் இல்லையெனில் அவர்களுக்கு அறவே மழை பொழியாது.
4) அல்லாஹ் மற்றும் அவனது தூதருடன் செய்து கொண்ட வாக்குறுதியை முறித்துவிட்டால் அவர்கள் மீது அல்லாஹ் விரோதிகளை சாட்டிவிடுவான். அவர்களிடமுள்ளதை விரோதிகள் கைப்பற்றிக் கொள்வார்கள்.
5) அல்லாஹ்வின் வேதத்தின்படி இல்லாமல் தங்களின் மனோ இச்சைபடி தலைவர்கள் தீர்ப்பு வழங்கினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே சண்டைகளை உண்டாக்கிவிடுவான். (இப்னுமாஜா)
பாவத்திற்கு தண்டனை உண்டு
இந்த நபிமொழியில் மழை பொழியாமல் வறட்சி, பஞ்சம் ஏற்படுவதற்கு இரு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று அளவு, நிறுவைகளில் மோசடி செய்வது. இரண்டு, ஜகாத் கொடுக்காமல் இருப்பது. இவ்விரு காரணங்களிலும் அடுத்தவர்களுக்குச் சேரவேண்டியதை ஏதேனும் ஒரு வழியில் அபகரித்து அமுக்கிக் கொள்வதையே குறிக்கப்பட்டுள்ளது. எனவே திருடுவது, ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது, கலப்படம் செய்வது, மோசடி செய்வது போன்ற எந்த வழியில் அடுத்தவர் பொருளை அபகரித்துக் கொண்டாலும் அவையனைத்தும் இந்த நபிமொழி எச்சரிக்கையின் கீழ் வந்துவிடும்.
மனிதன் பாவம் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவான். மழை தடுக்கப்படுவதும், வறட்சி, பஞ்சம் ஏற்படுவதும் அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றாகும். ஃபிர்அவ்னின் கூட்டத்தார் நல்லுணர்வு பெறுவதற்காக, பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்து தண்டித்தோம் (7:130) என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
மழை பொழிய பாவமன்னிப்பு அவசியம்
தௌபா செய்து பாவத்திலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரினால்தான் அடியானின் பாவங்கள் மன்னிக்கப்படும். பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டால் தண்டனைகள் விலக்கிக் கொள்ளப்படும். அப்போது மழை பொழியும். எனவேதான் நபியவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்களும் மழை தடுக்கப்பட்டிருக்கும் காலத்தில் தனது சமுதாயத்தாரிடம் பாவமன்னிப்புத் தேடுமாறு கோரினார்கள்.
நபி நூஹ் (அலை) தமது சமுதாயத்தாரிடம் கூறியதை அல்லாஹ் எடுத்துரைக்கிறான்: உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக, அவன் மிக மன்னிப்பவன். (மன்னிப்புத் தேடுனால்) உங்களுக்குத் தொடர்ந்து மழையை அனுப்புவான். உங்களுக்கு செல்வங்களையும் பிள்ளைகளையும் கொடுத்து உதவி செய்வான். உங்களுக்குத் தோட்டங்களை உண்டாக்குவான். (வற்றாத) ஆறுகளையும் உருவாக்கிடுவான் என்று நான் கூறினேன். (71:10-12)
நபி ஹுது (அலை) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: என் சமுதாயமே! உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். (பாவத்தை விட்டும் விலகி) அவன் பக்கம் திரும்பிவிடுங்கள். வானிலிருந்து மழையை உங்கள் மீது தொடராக அனுப்பிடுவான். உங்களின் வலிமைக்கு மேல் இன்னும் அதிகமான வலிமையைப் பெருகச் செய்வான். (இதைப் புறக்கணித்து) குற்றவாளிகளாகத் திரும்பிவிடாதீர்கள் (11:52)
மழை பொழியாமல் வறட்சி ஏற்படுவதற்கு உண்மையான காரணம் மனிதர்கள் செய்யும் பாவங்கள்தாம். எனவேதான் முஜாஹித் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: கடும் வறட்சி, அல்லது மழையே இல்லாமல் போய்விட்டால் மிருகங்கள், `ஆதமின் மகன் செய்த பாவத்தால் வந்த வினை இது` என்று பாவம் செய்பவர்களை சபிக்கிறது.
இன்று மழைத் தொழுகை கூட, ஒருபுறம் வருடந்தோறும் நடைபெறும் சம்பிரதாயமாகவும் மறுபுறம் எப்படித் தொழவேண்டுமென விவாதப் பொருளாகவும் ஆகிவிட்டது. தொழுகை அசல் அல்ல; கண்ணீர் சிந்தி, பாவமன்னிப்புத் தேடி, துஆ செய்வதுதான் அசலாகும். எனவேதான் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள், மழைத் தொழுகை சுன்னத் அல்ல; பணிவுடன் இறையச்சத்துடன் மைதானத்திற்குச் சென்று துஆ செய்வதுதான் அசல் சுன்னத் என்றார்கள்.

0 comments: